அனஸ்தீஸியா - Anasthesia

அனஸ்தீஸியா
ஒரு அறிமுகம். அதன் வகைகளும் உருவான வரலாறும்.

மருந்துகள் மூலமாக உணர்விழந்த நிலையில் இருப்பதே அனஸ்தீஸியா. முழுவதும் உணர்விழந்த நிலையில் இருப்பது ஜெனரல் அனஸ்தீஸியா. இது மயக்க மருந்தை முகர்வதாலோ ஊசி மூலம் உடலில் மருந்தைச் செலுத்தியும் உண்டாக்கப்படும். உடலில் தேவைப்படும் பாகத்தை மட்டும் தற்காலிகமாக உணர்விழந்து செயலிழக்கச் செய்வது லோக்கல் அனஸ்தீஸியா எனப்படும்.


இது இல்லாமல் அறுவை சிகிச்சை என்பதை நினைத்துப் பார்க்க முடியாது. மூன்று நூற்றாண்டுகளுக்கு முன்பு வரை இதற்கு சரியான முறை இல்லாமலே இருந்தது. மருத்துவர்கள் விதவிதமான வழிகளைக் கையாண்டார்கள். பெரும்பாலும் ஓபியம் உபயோகப்படுத்தினார்கள். அராபிய மருத் துவர்கள் ஓபியம் மற்றும் ஹென்பேன் உபயோகப்படுத்தியதாக கூறப்படுகிறது. போரில் அடிபட்டு கையையோ காலையோ வெட்டி எடுக்க வேண்டிய நிலையில் உள்ளவர்களுக்கு அதிக அளவு மதுவை அளித்து அறுவை சிகிச்சை செய்திருக்கிறார்கள்.


பதினெட்டாம் நூற்றாண்டின் இறுதியில் சிரிப்பு வாயு (laughing gas) எனப்படும் நைட்ரஸ் ஆக்ஸைட் வாயுவை பற்றி மருத்துவர்கள் அறியத் துவங்கினார்கள். ஆனால் இது 1840களில் பிரிட்டனில் பார்ட்டிகளில் உல்லாசத்திற்கே உபயோகப்படுத்தப்பட்டது. பின்னர் ஈத்தர் திரவமும் இதே போல உபயோகப்படுத்தலாம் என்று அறிந்தார்கள். பல பல் மருத்துவர்கள் பல்லைப் பிடுங்கும் போது வலியைக் குறைக்க இந்த வாயுக்களை பயன்படுத்தி ஆராய்ச்சி செய்தார்கள்.


1846ல் வில்லியம் மார்டன் எனும் அமெரிக்க பல் மருத்துவர் மற்ற மருத்துவர்கள் முன்னிலையில் ஒரு அறுவை சிகிச்சையை அனஸ்தீஸியா உபயோகித்து வலியில்லாமல் செய்து காட்டும் வரை மருத்துவ உலகம் முழுவதுமாக இதை ஏற்றுக் கொள்ளவில்லை.


ஆரம்ப காலத்து அனஸ்தீஸியாவில் பல விரும்பத்தகாத பக்க விளைவுகள் இருந்தன (நினைவு திரும்பும் போது வாந்தி முதலியவை). மேலும் அறுவை சிகிச்சைக்கு உணர்விழப்பது மட்டுமல்லாமல் தசைகளும் முழுவதுமாக தளர்ந்திருக்க வேண்டும். இதற்கும் மூளையில் சுவாச மையம் செயலிழப்பதற்கும் சிறிய அளவு மட்டுமே வித்தியாசம். இதனால் பல இடர்கள் இருந்தன.


இப்போது நோயாளியின் நாடித் துடிப்பு முதலியவற்றை அறிந்து, சுவாசத்திற்கு மூக்கில் மாட்டப்படும் குழாயிலேயே ஆக்ஸிஜனுடன் மிகத் துல்லியமான அளவில் கலந்து அளிக்கும் கருவிகள் உள்ளன. நாடித்துடிப்பு முதலியவை மோசமாகக் குறைந்தால் தானாகவே குழாயில் மயக்க மருந்தை குறைத்து அதிக அளவு ஆக்ஸிஜனை இக்கருவி அளிக்கும்.