பதினெட்டுச் சித்தர்கள் - About 18 Siddas

பதினெட்டுச் சித்தர்கள்
தென்னிந்தியாவில் முற்காலத்தில் இறையுணர்வில் முழுமையடைந்து, உயரிய இறைநிலை எய்தியவர்கள்.

தென்னிந்தியாவில் முற்காலத்தில் இறையுணர்வில் முழுமையடைந்து, உயரிய இறைநிலை எய்திய, மருத்துவம், ரசாயனம், இயற்கை விஞ்ஞானம், தத்துவம் போன்ற பல துறைகளிலும் சிறந்து விளங்கிய பதினெட்டு மகான்களை, பதினென் சித்தர்கள் என்று அழைக்கிறோம்.

இந்தப் பதினெட்டுச் சித்தர்கள் யார், யார்? என்பதில் பலரது கூற்றுக்களில், சில பெயர்கள் மாறுபடுகின்றன. எனினும், முற்காலத்தில் உயரிய இறைநிலையை எய்தியவர்களின் எண்ணிக்கை பதினெட்டிற்கும் மேற்படும் என்பதில் சிறிதும் சந்தேகமில்லை. சித்தர்கள் அனைவருமே, தாம் உயர்நிலை எட்டியது மட்டுமின்றி, உலக மக்கள் நலனுக்காக பல விதங்களிலும், உயரிய நுட்பங்களை வெளிப்படுத்தியதன் மூலமும், தம்முடைய காலத்தில் பிறருக்காக செயல்கள் புரிந்தும், சேவை புரிந்துள்ளனர்.

பதினெட்டுச் சித்தர்களில் ஒருவரான குதம்பைச் சித்தர் ஒரு பெண் என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழர்கள் மட்டும் தான் சித்தர்களா?
பதினென் சித்தர்கள் சமாதி அடைந்த இடங்கள் பெரும்பாலும் இன்றையத் தமிழ்நாட்டில் உள்ளது. சித்தர் பாடல்கள் என்றழைக்கப்படுபவை அனைத்தும் தமிழ் பாடல்களே. ஆனால் இந்தச் சித்தர்கள் அனைவரும் தமிழர்கள் என்று கூறமுடியாது. இவர்கள் எண்ணங்களைக் கடந்த உயர்நிலையை எட்டியவர்கள். மொழி, இன பாகுபாடுகளுக்குள் அடைபடுபவர்கள் அல்ல. இவர்களுடைய ரிஷிமூலமும் அறியப்படவில்லை. மேலும் தங்களுடைய இறையுணர்வால், உலகிலுள்ள எந்த மொழியிலும் உடனடியாக தம் கருத்துக்களை இவர்களால் வெளிப்படுத்த முடியும், என்று நம்பப்படுகிறது.

உதாரணமாக, போகர் இடையில் சீனாவிற்குச் சென்று அங்குள்ள மக்கள் இறைவன்பால் மனத்தை ஈடுபடுத்தப் பணியாற்றியதாக வரலாறு உண்டு. ராமதேவர், யாக்கோபு (Jacob) என்ற பெயரில் மெக்காவில் சில வருடங்கள் இறைத் தொண்டு புரிந்ததாகவும் கூறப்படுகிறது. திருமூலர் வடநாட்டிலிருந்து வந்தவர் என்றும் குறிப்புகள் உண்டு. கோரக்கரின் முழுப்பெயர் கோரக்நாத். ராமாயணத்தை வட மொழியில் எழுதிய, உலகிற்கு முதன்முதலில் அளித்த, வால்மீகியும் சிலர் கூற்றுப்படி பதினென் சித்தர்களில் ஒருவர்.

புரட்சி:
பிறப்பினால் வரும் சாதித் தீட்டுக்கள், சடங்குகள், சிலை வழிபாடு, கோயில் வழிபாடு, போன்றவற்றிற்கு அதிக முக்கியத்துவம் கொடுப்பது ஆகியவற்றில் உள்ள தவறுகள் பற்றி தெளிவான ஆணித்தரமான கருத்துக்களை முதன்முதலில் சித்தர் பாடல்களில் தான் பார்க்கிறோம். இதனாலேயே ஆச்சாரமான இந்துக்கள் சித்தர் பாடல்களை ஒதுக்கியதாக சித்தர் வரலாற்றை ஆராய்ந்த ஜ்வெலபில் (Zvelebil) குறிப்பிடுகிறார்.

பரிபாஷை:
சித்தர் பாடல்களில் இறைவனை உணர்தல் பற்றிய பல விபரங்களைப் பரிபாஷைகளாக (மறைந்திருக்கும் பொருளாக) வைத்துள்ளனர். இதனால் சாதாரண மனிதனுக்கும், இறையுணர்வு நிறைந்தவர்களுக்கும் ஒரே சமயத்தில் எட்டும் படியாக இந்தப் பாடல்கள் உள்ளது. தற்போது கிடைக்கும் சித்தர் பாடல் திரட்டுகளில் முதன்மையான 'பெரிய ஞானக் கோவை', ராமலிங்க முதலியாரால் 1899 ஆண்டில் வெளியிடப்பட்டது.

பதினெட்டுச் சித்தர்கள் யார்?
பதினெட்டுச் சித்தர்களின் பெயர்கள், சமாதியான இடம், இவர்களுடைய குரு, சிஷ்யர்கள் போன்ற பல விபரங்களைக் காண இங்கே க்ளிக் செய்யவும்.