அமிலங்கள்- Acids

அமிலங்கள்
விஞ்ஞான ரீதியான விளக்கம். அதன் வலிமை, வகைகள் பற்றிய அறிமுகம்.

பொதுவான விளக்கம்:
எல்லா அமிலங்களுமே துவர்ப்புச் சுவையுடையவை. தோலில் பட்டால் 'சுறுசுறு' அல்லது எரிச்சல் தன்மையை ஏற்படுத்துபவை. பெரும்பாலான உலோகங்களைக் கரைக்கும் தன்மையுடையவை. நீல லிட்மஸ் தாளை சிவப்பாக்கும். காரப்பொருட்கள் (Bases) அமிலங்களின் தன்மையை நீர்த்து விடும்.

விஞ்ஞான விளக்கம்:
அமிலங்கள் - 'எலக்ட்ரான்களை ஏற்றுக்கொள்ளும் தன்மை படைத்தவை' என்பது மிகச் சரியான விளக்கம்.

அமிலம் நீரில் எப்படி கலக்கிறது?
அமிலங்கள் நீரில் கரையும் போது ஹைட்ரஜன் அயான்களை (H+) உருவாக்குகிறது. அதாவது தன்னிடமுள்ள ஹைட்ரஜனின் எலக்ட்ரானை ஈர்த்துக் கொண்டு ப்ரோடானை தனியாக விட்டுவிடுகிறது. (ஹைட்ரஜன் ஒரு எலக்ட்ரானும் ஒரு ப்ரோடானும் கொண்டவை. ஒரு எலக்ட்ரான் தனியாக பிரிந்தால் H- அயான் எனவும், ஒரு ப்ரோடான் தனியாக பிரிந்தால் H+ அயான் எனவும் அழைக்கப்படும்.

இதனால் அமிலம் - 'கரைசலில் ப்ரோடானை உருவாக்கும்' என்பதும் ஏற்றுக்கொள்ளக்கூடிய விளக்கமான போதிலும் ஹைட்ரஜன் இல்லாத அமிலங்களும் உண்டென்பதால், மேற்ச்சொன்ன விளக்கமே மிகச் சரியான விஞ்ஞான விளக்கமாகிறது.

அமிலத்தின் வலிமை:
அமிலம் எந்த அளவுக்கு கரைசலில் ஹைட்ரஜன் அயான்களை தன்னிடமிருந்து பிரித்துக் கொடுக்கிறது என்பதைப் பொறுத்து அமிலத்தின் வலிமை தீர்மானிக்கப்படுகிறது. உதாரணமாக - ஹைட்ரோ க்ளோரிக் அமிலத்தின் (HCL) ஒவ்வொரு அணுக்கூட்டும் கரைசலில் ஹைட்ரஜன் அயான்களை விடுவிக்கிறது. அதனால் இது வலிமையான அமிலமாகவும். அசிட்டிக் அமிலம் (வினிகரில் இருப்பது) ஒரு சில அயான்களை மட்டுமே விடுவிப்பதால் மென்மையான அமிலம் என்றும் தீர்மானிக்கப்படுகிறது.

கனிம அமிலம் (In-Organic Acids):
பொதுவாக கார்பன் அணுக்களைக் கொண்டிராதவை. பல கனிம (in-organic) அமிலங்கள் மிக வலிமையானவை. வெடிமருந்துகள், உரங்கள், உலோகங்கள், பெயிண்ட், பிளாஸ்டிக் மற்றும் சிந்தெடிக் இழைகள் முதலியவை தயாரிக்க உதவுகின்றன.

வாகன பேட்டரிகளில் உபயோகப்படுத்தப்படும் சல்ப்யூரிக் அமிலம் ஒரு கனிம அமிலமாகும். ஹைட்ரோ க்ளோரிக் அமிலம், நைட்ரிக் அமிலம் ஆகியவை பிற முக்கிய கனிம அமிலங்கள்.

கரிம அமிலங்கள் (Organic Acids):
இவை கார்பன் அணுக்களைக் கொண்டவை. பானங்கள், அழகு சாதனங்கள், டிடர்ஜெண்ட், சோப்புகள், உணவு, மருந்துகள் மற்றும் ப்ளாஸ்டிக் தயாரிக்க உதவுபவை.

சிட்ரிக் அமிலம், அஸ்கார்பிக் அமிலம் (விட்டமின் C), அஸிடைல் சாலிசைலிக் அமிலம் (ஆஸ்ப்ரின்) மற்றும் அமினோ அமிலங்கள் போன்றவை பிரபலமான கரிம அமிலங்கள்.
Top மேலேGo Top