ரேடியோ அலையிலிருந்து காம்மா வரை

பிரபஞ்சத்தில் உள்ள சக்தி அனைத்தும் மின்காந்த அலைவரிசைகளாக இருக்கிறது. ரேடியோ அலைகளில் ஆரம்பித்து காம்மா அலைகள் வரை நீள்கிறது. அதைப் பற்றிய ஒரு பார்வை.

அலைகளின் பட்டியல்

முதலில் ஒளி. ஒளியின் ‍ வேகம் எப்போதுமே 1,86,000 மைல்கள் - ஒரு வினாடிக்கு. கிலோமீட்டரில் சொல்வதானால் ஒரு வினாடிக்கு 2,97,600 கி.மீ. (சொடக்கு போடுவதற்குள் சுமார் 3 லட்சம் கி.மீ.). இதற்கு மேல் வேகம் உண்டா? இல்லை, இந்தப் பேரண்டத்தில் (Universe) கிடையாது என்கிறார் ஐன்ஸ்டீன்.

ஒளியைப் பற்றி இங்கு கூறக் காரணம், ஒளியும் ஒரு மினன்காந்த அலை தான். அது மட்டுமல்ல மின்காந்த அலைகள் எல்லாமே ஒளியின் வேகத்தில் தான் பயணம் செய்கின்றன. அவற்றின் அலைநீளத்தில் (Wavelength) தான் வேறுபாடு. அலைநீளம் குறையக் குறைய அவற்றின் சக்தி அதிகரிக்கும். முதலில் மிக நீளமான ரேடியோ அலைகள்.

Electromagnetic Spectrum

ரேடியோ அலைகள்:

நமக்கு கிடைக்கும் ரேடியோ மற்றும் டெலிவிஷன் நிகழ்ச்சிகளை இந்த அலைகள் தான் தாங்கி வருகின்றன. ரேடியோ அலைகள் நூற்றுக்கணக்கான மீட்டர்கள் நீளம் முதல் 30 சென்டி மீட்டர் நீளம் வரை அலைநீளம் உடையவை. ரேடியோ அலைகள் மிக நெடுந்தொலைவு பயணிக்கக் கூடியவை. மிகத் தொலைவிலுள்ள நட்சத்திரங்கள், அண்டங்களைப் பற்றி ரேடியோ டெலஸ்கோப் மூலமாகவே அறிகிறோம்.

ஒரு AM ரேடியோ ஸ்டேஷனின் அலைவரிசை 750 MegaHertz என்றால் அந்த அலைகள் 400மீட்டர் அலைநீளம் கொண்டதாக இருக்கும். இதுவே 100 MegaHertz அலைவரிசை FM ஸ்டேஷன் என்றால் இதன் அலைநீளம் 3 மீட்டராக இருக்கும். இதனால் தான் FM ஸ்டேஷன்கள் அதிக சக்தியுடன் தெளிவாக இருந்தாலும் AM ஸ்டேஷன்களைப் போல நீண்ட தூரத்திற்கு எடுப்பதில்லை.

மைக்ரோ வேவ்:

மைக்ரோ அலைகள் 30 சென்டி மீட்டரிலிருந்து ஒரு மில்லி மீட்டர் அலைநீளம் வரை இருக்கும். நாம் இதனை நெடுந்தொலைவு போன் இணைப்புகளுக்கும், மைக்ரோவேவ் அடுப்புகள் மூலம் உணவு சமைக்கவும் பயன்படுத்துகிறோம்.

மைக்ரோவேவ் அடுப்பு செயல்பாடு பற்றி அறிய பெயரில் க்ளிக் செய்யவும்.

இன்ப்ரா ரெட்:

அலைநீளம் - ஒரு மில்லி மீட்டர் முதல் ஒரு மீட்டரில் 70 கோடியில் ஒரு பங்கு (700 நானோமீட்டர்) வரை. அதாவது கண்ணுக்குத் தெரியும் ஒளி வரை உள்ளவை. பெரும்பாலோர் உடலில் தசைப் பிடிப்புக்கு இன்ப்ரா ரெட் விளக்கு மூலமாக வெப்ப சிகிச்சை பெறுவதால் இந்த அலையுடன் ஒரு அறிமுகம் ஏற்பட்டிருக்கும்.

நெருப்பு போன்ற மிக உஷ்ணமான ஸ்தலத்திலிருந்து இன்ப்ரா ரெட் கதிர்கள் அதிக அளவில் வெளியாகும். நாம் சற்று நேரம் அமர்ந்து எழுந்து போன சோபாவில் நமது உடல் உஷ்ணத்தினால் ஏற்பட்ட இன்ப்ரா ரெட் கதிர்கள் கொஞ்ச நேரத்திற்கு மிச்சமிருக்கும். காட்டுத்தீ போன்ற பெரு விபத்துக்களில் புகை மண்டலத்தினூடே எரியும் இடங்களை இன்ப்ரா ரெட் பைனாகுலர்கள் வழியாக தெளிவாகக் காணலாம்.

நாம் காணும் ஒளி:

அலைநீளம் - 700 நானோமீட்டர்கள் முதல் 400 நானோமீட்டர்கள் வரை. நம் கண்ணுக்கு தெரியும் ஒளி அலைவரிசைகள் மிகக் கொஞ்சம் தான். ஒரு வேளை இதனால் தான் கண்ணால் காண்பதும் பொய் என்று சொல்லி வைத்தார்களோ.

வானவில்லின் ஏழு வர்ணங்களான VIBGYOR எனப்படும் வயலட் முதல் சிவப்பு வரை உள்ள இந்த அலைகளிலேயே நாம் காணும் அனைத்து வண்ண ஜாலங்களும் அடக்கம்.

புற ஊதா (Ultra Violet):

அலைநீளம் - 400 நானோமீட்டர்கள் முதல் 10 நானோமீட்டர்கள் வரை. சூரியனிடமிருந்து இவை மிக அதிக அளவில் வெளிப்படுகின்றது. மிகச் சிறிய அளவு வரை நமது உடலுக்கு இது தேவைப்பட்டாலும், நம் உடலில் பட்டால் தோல் உடனே வெந்துவிடக் கூடியது. வெளியிலிருந்து வரும் புற ஊதாக் கதிர்களை பூமியின் மேல் மண்டலத்திலிருக்கும் ஓஸோன் தடுத்து விடுவதாலேயே நாம் பூமியில் உயிருடன் வீர தீர பராக்கிரமங்கள் புரிய முடிகிறது!

எக்ஸ்-ரே:

மிகச் சக்தி வாய்ந்த கதிர்கள். இரும்பு போன்ற உலோகங்களையும் துளைத்துச் செல்லக் கூடியவை. அலைநீளம் - 10 நானோமீட்டர் முதல் மீட்டரில் 10 ட்ரில்லியனில் ஒரு பங்கு வரை.

எக்ஸ்-ரே எல்லோருக்கும் அறிமுகமான ஒன்று. மனித உடலை ஊடுருவிப் பார்க்க உதவுவது மட்டுமல்லாமல், விமான தளங்களில் பெட்டிகளைத் திறக்காமலேயே சோதனையிட உதவுகிறது.

காம்மா அலைகள் (Camma Rays):

ஒரு மீட்டரில் 10 ட்ரில்லியனில் ஒரு பங்கை விட குறைவான அலைநீளத்தை உடையது. எக்ஸ்-ரே கதிர்களை விட அதிக சக்தியோடு ஊடுருவக் கூடியது. அனுக்களின் கதிரியக்கத்திலும், நியூக்ளியர் வெடிப்புகளிலும் இது வெளிப்படும்.  எக்ஸ்-ரே படங்களை விட நுணுக்கமாக உடல் கூற்றை அறிய உபயோகப்படுத்தப் படுகிறது.

அண்ட வெளியில் நட்சத்திரங்களின் பிறப்பு மற்றும் இறப்பு ரகசியங்களை அறிந்து கொள்ளவும் உதவுகிறது.