வெளிநாட்டிற்கு சென்று இறங்குபவர்களுக்கு இமிக் ரேஷன், கஸ்டம்ஸை விட பெரிய சோதனை 'ஜெட் லாக்' தான். பல்லாயிரக்கணக்கான கிலோமீட்டர்களை சில மணி நேரத்திற்குள் ஜெட் விமானம் மூலம் கடந்து விடுகிறோம். ஆனால் நமது உடலின் மணிக் கணக்கு (body clock) அவ்வளவு லேசில் மாறி விடாது. அது பழைய மணிக்கணக்குப்படி தான் தூக்கம், உணவு எல்லாவற்றையும் எதிர்பார்க்கும்.
இதிலிருந்து மீண்டு புதிய இடத்தின் நேரத்திற்கேற்றபடி தூக்கம், பசி ஆகியவை தானாக மாற சில நாட்கள் பிடிக்கும். ஆனால் அதுவரை செய்ய வேண்டிய வேலைகள், சந்திப்புகளில் தடுமாற்றம் இல்லாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். தவிர, அடிக்கடி நீண்ட தூரம் ஜெட் பயணம் செய்பவர்களுக்கு 'ஜெட் லாக்'கை தவிர்ப்பது மிக முக்கியம்.
இதற்கும் ட்ரீட்மெண்ட், மாத்திரை என்று வரத் தொடங்கி விட்டாலும் மனப்பயிற்சியாலும், உடல் பழக்கத்திலும் இதை சற்று எளிதாக வழிக்கு கொண்டு வரலாம்.
கிழக்கே போகும் ஜெட்!!
கிழக்கு நோக்கி செல்லும் பயணத்தில் தான் உடலின் நேரக்கணக்கு அதிகமாக தடுமாறும். நீண்ட தூர பயணத்திற்கு முன் உடலின் தூக்கம், உணவு நேரங்களை சிறிது மாற்றிக் கொள்வது நல்லது. நீங்கள் கிழக்கே பறந்தால் வழக்கத்தை விட ஓரிரு மணி நேரம் முன்பாகவும், மேற்கே பறந்தால் ஓரிரு மணி நேரம் தாமதமாகவும் உணவு, தூக்கத்தை பழக்க வேண்டும்.
பயணத்தின் போது:
புறப்படுவதற்கு முந்தைய இரவு நன்றாக தூங்கவும். விமானத்தில் ஏறியவுடன் கைக்கடிகாரத்தை சேருமிடத்தின் நேரத்திற்கு சரி செய்து கொண்டு, அந்த நேரப்படி உணவருந்தவும். ஜெட் லாக்கிற்கு பயண அசதியும் ஒரு காரணம். நீண்ட பயணத்தில் முழுவதும் உட்கார்ந்தே இருக்காமல் அவ்வப்பொழுது சற்று நடந்து தசைகளை தளர்த்தி விடவும்.
KLM ராயல் டச் ஏர்லைன்ஸ் ஜெட் லாக் கஷ்டத்தைக் குறைக்க தங்களது இணைய தளத்தில் ஆலோசனைகள் கூறுகிறார்கள். மற்ற சில ஏர்லைன்ஸ்களும் விமானத்திலேயே இதற்கான ஆலோசனை மற்றும் வீடியோக்களை அளிக்கிறார்கள்.
ட்ரிட்மெண்ட் வேணுமா?
பல ஹோட்டல்களில் இதற்கு ட்ரீட்மெண்ட் அறிவித்தாலும் அவை பெரும்பாலும் அதிக விலையுள்ள மசாஜ் மற்றும் விட்டமின்கள் நிறைந்த உணவு போன்றவைகளின் கலவையாகவே உள்ளது.
நிறைய தண்ணீர் குடிப்பது நல்லது. முடியுமானால் பயணம் முடிந்தவுடன் பகல் பொழுதை திறந்தவெளியில் (வெயிலில்!) கழிப்பது நலம்.