செவ்வாயில் இறங்க இடம் தேடி..

செவ்வாயில் உயிரினச் சான்று தேடி பிரிட்டனின் பீகிள்2 வாகனமும் அமெரிக்காவின் ரோவர் வாகனமும் வரும் 2003ம் ஆண்டு செவ்வாய் செல்லவிருக்கின்றன.

செவ்வாயில் உயிரினச் சான்று தேடி பிரிட்டனின் பீகிள்2 வாகனமும் அமெரிக்காவின் ரோவர் வாகனமும் வரும் 2003ம் ஆண்டு செவ்வாய் செல்லவிருக்கின்றன. அங்கு இறங்க இடம் தேர்வு தற்போது செய்யப்படுகிறது.

பீகிள்2 - பிரிட்டனின் செவ்வாய் பயணம்

ஏற்கனவே 1997ம் ஆண்டு அமெரிக்காவின் பாத்ஃபைண் டர் வாகனம் செவ்வாயில் இறக்கிவிடப்பட்டுள்ளது. பிரிட்டனின் பீகிள்2 வாகனம், செவ்வாயில் பழமையான குன்றுகளுக்கும், வடக்கு சமவெளிக்கும் இடைப்பட்ட 'இசிடிஸ் ப்ளானிட்டியா' என்ற சமதளப் பிரதேசத்தில் இறக்கிவிட ஐரோப்பிய வான்வௌளி ஏஜன்சி (ஏஸா) டிசம்பர் 2000ல் நடத்திய கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது.

பீகிள்2வை ESAவின் 'மார்ஸ் எக்ஸ்பிரஸ்' என்கிற ராக்கெட் ஜூன் 2003ல் கஜகஸ்தானில் உள்ள (ரஷ்ய) பைக்கானூர் காஸ்மோடிரோம் தளத்தில் இருந்து ஏவப்படும்.

பீகிள்2-வின் குறிக்கோள் செவ்வாயில் உயிர்கள் இருக்கின்றதா அல்லது எப்போதாவது இருந்ததா? என்ற கேள்விக்கு முடிவான விடை காண்பதே. அதற்கு 'இசிடிஸ் ப்ளாண்டியா' தான் மிகச் சிறந்த இடம், முன்பு எப்போதாவது செவ்வாயில் உயிர்கள் இருந்தால் அதன் பாஸில்கள் கிடைக்க இங்கு அருமையான வாய்ப்பு உள்ளது என்று விஞ்ஞானிகள் கருதுகிறார்கள்.

பீகிள்2 செவ்வாயில் பாதுகாப்பாக தரையிறங்க 'ஏர் பேக்குகள்' உபயோகிக்கப்படும். செவ்வாயில் தரையில் படும் போது இந்த ஏர் பேக்குகள் பந்து போல் எம்பி விழுந்து நிலைத்து நின்ற பின் அதனுள் இருக்கும் வாயு வெளியேற்றப்பட்டு வாகனம் சேதமின்றி வெளிவரும்.

ரோவர் - அமெரிக்காவின் மற்றொரு செவ்வாய் ஆய்வுத் திட்டம்
பீகிள்2 திட்டம் ஒரு புறமிருக்க, அமெரிக்கா இரண்டு ரோபோட்களை 2004ம் ஆண்டு செவ்வாயில் இறக்கிவிடத் திட்டமிட்டுள்ளது. இந்த இரண்டு 'ரோவர்'களுமே முக்காலத்தில் அங்கு நீர், அதாவது திரவ வடிவில் நீர் ஆதாரங்களைத் தேடும் உபகரணங்களைப் பெற்றிருக்கும்.

திரவ வடிவில் நீரென்றால் அது நிச்சயம் 0 - 100 டிகிரிக்குள் தான் இருக்க முடியும். மேலும் நீரில் ஆக்ஸிஜனும் இருக்குமென்பதால் அதில் உயிர்கள் (ஒரு செல் உயிர் கள், பாக்டீரியாக்கள் முதல் பல வித உயிரினங்கள்) உண்டாகி வாழ்ந்திருக்ககூடிய சாத்தியங்கள் அதிகமாக உண்டு. பூமியில் உயிரினம் முதன்முதலில் தோன்றியதே நீரில் தான் என்று நம்பப்படுகிறது.

செவ்வாயில் தரையிறங்க வாய்ப்பான 185 இடங்கள் பட்டியலில் தொடங்கி தற்போது 30 மிக முக்கியமான இடங்கள் பட்டியலாகக் குறுக்கப்பட்டுள்ளது. இதில் சேதமின்றித் தரையிறங்க வாய்ப்பான இடம் என்பதை விட விஞ்ஞான ரீதியாக சான்றுகள் கிடைக்க வாய்ப்பான இடம் என்பதற்குத்தான் முக்கியத்துவம் அளிப்பதாக வல்லுனர்கள் தெரிவித்துள்ளனர். ஏவுவதற்கு ஒரு வருடம் முன்பாக இறங்கும் இடம் பற்றி இறுதி முடிவு எடுக்கப்படும்.

தற்போது செவ்வாயைச் சுற்றிக் கொண்டிருக்கும் 'மார்ஸ் க்ளோபல் சர்வேயர்' எனும் விண்கலம் அனுப்பும் தகவல்கள் இதற்கு மிகவும் உதவிகரமாக இருப்பதாகள் அமெரிக்க விஞ்ஞானிகள் கூறுகிறார்கள்.

ரோவர் பயணத் திட்டங்கள்

அமெரிக்காவில் ப்ளோரிடா மாகாணத்தில் கேப் காணவெரல் தளத்திலிருந்து முதல் ரோவர் ரோபோட் மே 30, 2003 லும், இரண்டாவது அதே வருடம் ஜூன் 27லிலும் ஏவப்படும். செவ்வாயில் முறையே 2004ம் ஆண்டு ஜனவரி 4ம் தேதியிலும், பிப்ரவரி 8ம் தேதியிலும் தரையிறங்குமென்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த ரோவர்கள் தற்போது MER-A மற்றும் MER-B என்றும் அழைக்கப்படுகிறது. (MER - Mars Exploration Rover).

இரண்டு ரோவர்களும் ஒரு செவ்வாய் தினத்திற்கு (24.62 மணிகள்) 100 மீட்டர் தூரம் வரை பயணம் செய்யும். ஆரோக்கியம் நல்லபடியாக இருந்தால் இவை 2004 ஏப்ரல் மாத்தைத் தாண்டிக் கூட வேலை செய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

செவ்வாயின் தட்பவெப்பம்:

செவ்வாயின் மேற்பரப்பின் வெப்பநிலை +27 முதல் -126 டிகிரி வரை உள்ளது. (பூமியில் + 58 முதல் -88.3 வரை). ஆனால் சூரியனிடமிருந்து பூமியை விட தூரத்திலிருப்பதால் சராசரி வெப்பநிலை -48 டிகிரி சென்டிகிரேடு. இதனுடைய காற்று மண்டலம் மிகவும் மெல்லியது, பெரும்பாலும் கார்பன்-டை-ஆக்ஸைடு கொண்டது. டெலஸ்கோப்பில் பார்த்தால் மிகச் சிவப்பாகத் தெரியும். அதனால் தான் செவ்வாய் என்றும் ஆங்கிலத்தில் the red planet என்றும் அழைக்கப்படுகிறது. ஆச்சரியமான விஷயம் என்னவென்றால் பூமியைப் போன்றே துருவங்கள் பனிப்பிரதேசங்களாக இருப்பது தான். இங்கு ஐஸ் என்பது பெரும்பாலும் 'ட்ரை ஐஸ்' எனப்படும் கார்பன்-டை-ஆக்ஸைடு தான்.

ஒரு கணம் யோசித்துப் பார்த்தால், நாம் எவ்வளவோ முன்னேறியிருக்கிறோம், மிகவும் நுட்பமாக அறிகிறோம். ஆனால் நமக்கு மிக அருகில் உள்ள கிரகத்தில் கூட உயிர்கள் உள்ளதா என்று இது வரை நமக்குத் தெரியாது! அதிகபட்சம் நம்முடைய நிலா வரையே நாம் போய்த் திரும்பியிருக்கிறோம். நாம் கடக்க வேண்டிய தூரம் மிக அதிகம்.