Smoking effects in Lungs

புகைப்பிடித்தால் நுரையீரலில் என்ன நடக்கிறது?

நுரையீரலில் புகையின் விளைவு, ரத்தகுழாய், மூளை ஆகியவற்றில் நடப்பது.

புகைப்பவர்களுக்கு ஒரு சிகரெட்டிலிருந்து சராசரியாக 1மில்லிகிராம் அளவு நிகோட்டின் நுரையீரல் வழியாக உடலுக்குள் செல்கிறது.

 நுரையீரல் உள்சுவர்களில் கோடிக்கணக்கான 'ஆல்வியோலி' Alveoli என்ற நுண்ணிய காற்றுப் பைகள் உள்ளன. இதன் மூலமாகவே உடலுக்குள் வாயுப் பரிமாற்றம் நடக்கிறது. (இந்த ஆல்வியோலியின் சுவர்ப் பகுதியின் பரப்பளவு நமது மொத்தத் தோல் பகுதியை விட 90 மடங்கு அதிகம்). இதன் வழியாக ரத்தக்குழாய்களை எட்டும் நிக்கோட்டின் உடனடியாக மூளையை நோக்கி பயனிக்கிறது.

ஆல்வியோலி பைகளுக்குள் நிகோட்டின் நுழைந்ததுமே நுரையீரல் வேகமாக செயல்பட்டு சுமார் 80 சதவிகித நிகோட்டினை 'கோட்டிநைன்' (Cotinine) மற்றும் 'நிகோட்டின் ஆக்சைட்' (Nicotine Oxide) என பிரித்து உடலுக்குள் அனுப்புகிறது. (இதில் கோட்டிநைன் நேரடியாக சிறுநீரில் வெளியேறி விடும். நிகோட்டின் ஆக்சைட் பின்னர் இரத்ததிலிருந்து சுத்தப்படுத்தப்பட்டு சிறுநீரில் வெளியேறும்.).

 தொடர்ந்து புகைப்பவர்களுக்கு, ஆல்வியோலி பகுதி அதிக வேலைப்பளுவுடன் இருப்பதால் இவை செயல்திறன் குறைந்தும், சில பகுதிகளில் அழிந்தும் போவதுண்டு. இதனால் மூச்சுத் திணறல் ஏற்படும். நுரையீரலில் புண்கள் உண்டாகி 'கேன்சர்' வரக் கூடும். போதிய அளவு காற்று கிடைக்காததால் இதயமும் பாதிக்கப்படலாம்.

புகையிலையில் நிகோட்டினைத் தவிர ஆயிரக்கணக்கான மற்றப் பொருள்களும் உண்டு. இதில் பல உடலுக்கு தீங்கு விளைவிக்கக் கூடியவை. மேலும் புகை, தூசி போன்றவை நுரையீரலுக்கு வரும் குழாய்களில் (ப்ரோன்கஸ்) வந்துவிட்டால் ம்யூகஸ் எனும் திரவம் இதன் சுவர்களில் சுரந்து அவைகளை ஒட்டிக் கொள்ளச் செய்யும். இதுவே சளியாக வெளியேறுகிறது. அதிக அளவு புகை இந்தக் குழாய்களில் செல்லும் போது தொடர் இருமல் ஏற்படுகிறது.

இது தவிர நிகோட்டின், தான் பயணம் செய்யும் ரத்தக்குழாய்களை சுருங்க செய்வதும் உண்டு. இதனால் உடலில் ரத்த ஓட்டம் குறையவும், ரத்த அழுத்தம் அதிகரிக்கவும் கூடும்.

தொடர்ந்து புகைக்க ஆசை வருவதேன்?

இது நிகோட்டினின் வேலை தான். நிகோட்டின் முதலில் மூளையில் உள்ள செல்களைத் தூண்டி விட்டு உடலுக்குள் வேகமூட்டுகிறது. பின்னர் தொடர்ந்த உபயோகத்தால் செயல்திறன் இழந்த நிலைக்குக் கொண்டு செல்கிறது (மதுவைப் போல).

இங்கு மூளையின் ஒரு நரம்புப் பகுதியைப் பற்றி கூற வேண்டும். உதாரணமாக பசி உணர்வு நம் உடல் தேவையை நமக்கு தெரிவிக்கிறது. பசிக்கும் போது உணவு உண்டு முடித்தால் ஒரு நிறைவு உணர்வு உண்டாகிறது. இந்த நிறைவு உணர்வு ஒரு சுகமான, இதமான உணர்வாக இருப்பதால் தேவையில்லா விட்டாலும் (பசி தீர்ந்த பின்னும்) தொடர்ந்து சாப்பிடும் விருப்பம் ஏற்படுகிறது.

மூளையில் இந்த சுகமான உணர்வை ஏற்படுத்தும் பகுதிக்கு செல்லும் 'டொபாமைன்' (Dophamine) எனும் நியூரான்களை நிகோட்டின் அதிக அளவில் செயல்படுத்த வைக்கிறது. இதனால் 'கோகெய்ன்' மற்றும் 'நிகோட்டின்' உபயோகிப்பவர்களுக்கு அது உடலுக்கு தீங்கானது என்று தெரிந்தாலும் தொடர்ந்து உபயோகிக்கும் பழக்கத்தை ஏற்படுத்துகிறது.