வீட்டு அமைப்பு - வாஸ்து - Vaasthu

வீட்டு அமைப்பு - வாஸ்து
பரம்பரை வீட்டு அமைப்புகளும். வாஸ்து மற்றும் சீன விதிமுறைகளும்.

கட்டிடங்களுக்கான விதிமுறைகள் வாஸ்து சாஸ்திரம் என்று அதர்வண வேதத்தின் ஒரு பகுதியான ஸ்தபத்ய வேதத்தில் இருக்கிறது. எனினும் இது ஒரு மதத்திற்கோ, இனத்திற்கோ உரியதாக இல்லாமல் உலகம் முழுவதற்குமே உரிய ஒரு விஞ்ஞானமாகவே கருதப்படுகிறது.

பிரமிட் - கட்டிட அமைப்பில் சில நன்மைகள்:
'விஞ்ஞானமா?' என்று யோசிக்கிறீர்களா? வாஸ்து பற்றி சொல்லும் முன் சில நிரூபிக்கப்பட்ட உண்மைகளைப் பார்ப்போம். பிரமிடுகள் பற்றி பெரும்பாலோர்க்குத் தெரியும். பிரமிட் வடிவ கூம்பிற்குள் வைத்த பிளேடு போன்ற பொருட்கள் நீண்ட நாட்களுக்கு கூர்மை மங்காமல் இருக்கிறது, பிரமிட் வடிவ கட்டிடங்களில் தியானம் செய்யும் போது மனநிலை மிக விரைவாக ஒன்றுபடுகிறது போன்றவை அறிவியல் ரீதியாக நிரூபிக்கப்பட்ட உண்மைகள். எகிப்தில் பிரமிடுகள் கட்டப்பட்டதே அங்கு இறந்து போன அரச குடும்பத்தார் உடல்கள் அழியாமல் பாதுகாக்கத்தான். அவைகள் ஆயிரக்கணக்கான வருடங்கள் கழித்தும் சேதமடையாமல் இருப்பதற்கு பிரமிட் வடிவமும் ஒரு காரணம் என்பதும் ஏற்றுக் கொள்ளப்பட்ட ஒன்று. கட்டிட அமைப்பினால் அதன் உள்ளே இருக்கும் பொருட்கள் மற்றும் மனிதர்களுக்குள் சில மாற்றங்களைச் செய்ய இயலும் என இதன் மூலம் உணரலாம்.

ஜீவ-மின் காந்த அலைகள்:
பிரமிட் போன்ற அமைப்புகள் நீடிக்க வைக்கும் நன்மையைச் செய்வது போலவே வேறு சில விதமான அமைப்புகளால் சக்தியை விரயம் செய்து இடையூறு செய்யவும் இயலும் என்று வாஸ்து கூறுகிறது. நாமெல்லோரும் பிரமிட் வடிவத்தில் வீடு அமைத்து வாழப்போவதில்லை. நாம் அமைக்கும் வழக்கமான வீடு, வியாபாரம் மற்றும் தொழிற்கூட அமைப்பால் ஏற்படும் ஜீவ-மின் காந்த அலைகள் நமக்கு இடையூறு செய்யாமல், துணை புரிவதற்காக ஏற்பட்ட விதிமுறைகளே வாஸ்து சாஸ்திரம் என்று கூறப்படுகிறது.

பஞ்ச பூதங்கள் எனப்படும் நிலம், நீர், காற்று, நெருப்பு மற்றும் ஆகாயம் ஆகியவற்றின் அதிர் வலைகள், மேலும் சூரியன், சந்திரன் ஆகியவற்றின் ஈர்ப்பு, காந்த அலைகள் முதலியவைகளால் ஒரு கட்டிட அமைப்பிற்குள் ஏற்படும் ஜீவ-மின் காந்த அதிர்வுகள் அதனுள் இருப்பவர்களுக்கு நன்மை புரியும் அளவில் இந்த விதிமுறைகள் வகுக்கப்பட்டுள்ளன.

இதனால் மட்டுமே ஒரு மனிதன் மேன்மை அடைய முடியுமா என்றால், இல்லை, இது மனிதனின் செயல்களுக்கு ஏற்படும் பிற இடைஞ்சல்களை களையும் ஒரு வழி என்றே கூறப்படுகிறது.

பெங்-சூய் (Feng Shui):
சீனர்களிடமும் பெரும்பாலும் வாஸ்து அமைப்பை ஒத்த பெங்-சூய் எனும் முறை பிரபலமாக உள்ளது. வாஸ்துவைப் போல இடைக்காலத்தில் பின்பற்றப்படாமல் போகும் நிலை அங்கு ஏற்படாததால் மிகப் பெரிய நிறுவனங்களும் இயல்பாக அந்த முறையைப் பின்பற்றுகின்றன. புத்த மதம் இந்தியாவிலிருந்து சீனாவிற்குச் சென்ற போது வாஸ்து முறையும் உடன் சென்றிருக்கலாம் என்று வாஸ்து வல்லுநர்கள் கருதுகிறார்கள். சீனமும் மிகப் பழங்காலத்திலேயே மிக முன்னேறிய வாழ்க்கை முறையைக் கொண்ட ஒரு நாடானதால் இதை முடிவு செய்வது கடினம்.

வரலாறு:
வேதத்தின் ஒரு பகுதி என்பதால் இதன் தோற்றம் முடிவு செய்ய இயலாத ஒன்று. ராமாயண, மகாபாரத காலத்திற்கு முன்பாகவே வாஸ்து விதிமுறைகளை உபயோகித்ததற்கு சான்றுகள் உள்ளன. அயோத்தி நகரம் வாஸ்து சாஸ்திரத்தின் ஒரு பகுதியான மானஸராவில் உள்ள ஒரு நிர்மாண வரைபடத்தைக் அடிப்படையாக வைத்து உருவாக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

மத்சயப் புராணம் எனும் பழம்பெரும் காப்பியத்தில் வாஸ்து சாஸ்திரத்தில் சிறந்த 18 அறிஞர்கள் (பிருகு முனிவர் முதல் ப்ரஹஸ்பதி வரை) குறிப்பிடப்பட்டுள்ளனர். விஸ்வகர்மா, மயன் ஆகியோரும் இதில் அடங்குவர். கஷ்யப முனிவரும் பிருகு முனிவரும் வாஸ்து சாஸ்திரத்தில் மிக முக்கியமான நடைமுறைகளை உருவாக்கியவர் என்றும் கூறப்பட்டுள்ளது.