கொள்கை (Our Policy)

இது தமிழ்த் தளம் என்பதை விட, இயல்பாக விஷயஞானம் பெறும் தளம் என்பதே எமது குறிக்கோள். ஆகவே, நிஜ வாழ்க்கையைப் போல் இங்கே ஆங்கில வார்த்தைப் பிரயோகங்களுக்கு தடையில்லை. விஞ்ஞானம் போன்ற விஷயங்களில் ஆங்கிலப்பதங்கள் தவிர்க்க முடியாதவை. முழுவதுமாக ஆங்கிலத்தில் படிப்பதை விட - பெரும்பாலும் தமிழ், சில முக்கியப்பதங்கள் ஆங்கிலம் - என்பது 'காண்வெண்ட் தமிழர்'களுக்கும் உடனடியாக புரிபவை. இந்த வழியில் நீங்கள் தேர்ச்சி பெற்ற துறையைப் பற்றி மற்றவருக்கும் விரிவாக்க விரும்பினால் உங்களை வரவேற்க காத்திருக்கிறோம்.

ஆங்கிலப்பதங்களை உபயோகப்படுத்தும் போது அதைத் தமிழ்ப்படுத்தும் சர்ச்சையும் உருவாகிறது. இங்கு சில விஷயங்களை சுட்டிக் காட்டுவது அவசியமாகிறது. மொழி என்பது நமது மனத்தின் எண்ணங்களை, தேவைகளை பிறருக்கு தெரியப்படுத்தும் ஒரு வழி. மொழி ஒரு முழுமையான வழியல்ல. நேரில் பேசும் போது வாய்மொழியை விட, பேசும் விதம், கை-தோள்-தலை சைகைகள் மூலம் உணர வைப்பது மிக அதிகம். ஓராயிரம் வார்த்தைகளை விட ஒரு வரைபடம் மிகத்தெளிவாக, மிக விரைவாக உன்மையை உணர்த்திவிடும்.

மேலும் பல்லாயிரம் வருடங்கள் கடந்தும் நிற்கிற வலிமை மிக்க 'தமிழ்' நீங்களோ நானோ காப்பாற்ற வேண்டிய நிலையில் இல்லை. அது மட்டுமல்ல, நாமே முயற்சித்தாலும் அதை அழிக்க முடியாது. ஆகவே, 'தமிழை பழித்தவனை...' போன்ற வசனங்கள் தேவைப்படாத ஒன்று. சூரியனைப் பார்த்து தெருநாய் குரைத்தால் சூரியனுக்கு அவமானமா? இந்த ஆவேசங்களை நீக்கிவிட்டுப் பார்த்தால் மொழியின் உபயோகம் அதன் மூலம் கிடைக்கும் கவிதை போன்ற சுகங்கள் தவிர பெரும்பாலும் நமது விஷயஞானத்திற்கு உதவும் ஒரு கருவி மட்டுமே.

மேலும் நமது எண்ணங்கள் பிறழாமல் பிறருக்கு சென்று சேர வேண்டும். காப்பி என்றால் குக்கிராமத்தில் வசிக்கும் கிழவிக்குக் கூடத் தெரியும். அதுவே தமிழ்ப்படுத்தப்பட்டது தான்! ஆங்கில கொஃபி (coffee) தமிழில் ஏற்கனவே காப்பி ஆகி விட்டது. இதற்கு மேலும் அதைக் 'குழம்பி' என்று குழப்பிக்கொண்டிருக்க வேண்டியதில்லை.

ஒரு நிறுவனத்தின் விற்பனைப் பெயரான 'ஜீப்' என்பதை 'ஈப்பு' என்று பிடிவாதமாக தமிழ் 'படுத்திய' அரசின் அகராதியை போல இங்கு செய்யப் போவதில்லை. எனவே விண்டோஸ்2000 என்ற விற்பனைப் பெயர் அப்படியே பயன்படுத்தப்படும். ஜன்னல்கள்2000 என்றோ (ச்சே.. வடமொழி!) அல்லது சாளரங்கள்2000 என்றோ இம்சிக்கப் போவதில்லை.

இந்த தளத்தில் இல்லாத விஷயங்களே இல்லை எனும் நிலையை அடைவது விருப்பமாக இருந்த போதிலும், சில விஷயங்களுக்கு இங்கு இடம் தருவதில்லை என்று முடிவு செய்யப்பட்டுள்ளது. ஆபாசம், வன்முறை போன்றவை மட்டுமல்லாமல் அரசியலுக்கும் கூட இடம் தர வேண்டாம் என முடிவு செய்திருக்கிறோம்.